Skip to main content

தமிழ் இலக்கிய வரலாற்றின் தோற்றமும் வளர்ச்சியும்

 தமிழ் இலக்கிய வரலாற்றின் தோற்றமும் வளர்ச்சியும்

உள்ளத்தில் உதிக்கின்ற எண்ணங்கள், நினைவு அலைகள், சிந்தனைகள், கருத்துகள் ஆகியவற்றைப் பிறருக்கு எடுத்துரைக்கப் பயன்படும் கருவியே மொழியாகும். அம்மொழி பேசும் மக்களின் முடிந்த கொள்கைகளையும் முதிர்ந்த குறிக்கோள்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்வது இலக்கியமாகும்.

"அறிவே இலக்கியத்தின் அடிப்படை; கற்பனையே அதன் துணை; உண்மையே உள்ளீடு; இன்பமே அதன் விளைவு" என்கிறார் அறிஞர் ஜான்சன். இத்தகைய இயல்புகளை உடையதாகவே தமிழ் இலக்கியங்கள் திகழ்கின்றன.

தமிழ்நாட்டில் பண்டைக்காலத்தில் பிறமொழியாரின் தாக்குறவும் பிறமொழி இலக்கியத்தின் தாக்குறவும் குறைவாக இருந்ததால் அங்கங்கே வழங்கி வந்த நாட்டுப் பாடல்களிலிருந்தே புலவர்களின் பாடல்கள் அமைக்கப்பட்டுத் தோன்றின. தமிழிலக்கியம் தொடங்கிய காலத்தில் அகவல், கலிப்பா, பரிபாடல் போன்ற செய்யுள் வகைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன.

பல்லவர் ஆட்சிக்காலத்தில் தமிழ், வடமொழி ஆகிய மொழிகளுக்கும் அவற்றைச் சார்ந்த கலைகளுக்கும் ஆதரவு கிடைத்து வந்தது. வடமொழிப் புராணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்நிலையில் தமிழ், வடமொழிச் சொற்கள் கலந்த மணிப்பிரவாளம் என்னும் நடையில் இலக்கியங்கள் தோன்றின.

இ.பி. இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் நாட்டுப்புறப்பாடல் வடிவங்களைக் காணமுடிகிறது. கி.பி. எழு, எட்டாம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட பக்திப் பாடல்களிலும் இவ்வடிவங்களைப் பயன்படுத்தினர். அவற்றிலிருந்து அமைந்ததே விருத்தம் என்னும் செய்யுள் வடிவமாகும். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் திருத்தக்கதேவர் முதன்முதலில் விருத்தம் என்னும் பாவகையில் சீவகசிந்தாமணியை இயற்றினார். அதற்கு முன்பாக அகவல் என்னும் வடிவத்தையே காவியங்கள் பயன்படுத்தி வந்தன. இன்று மிகுதியாகப் பயன்படும் செய்யுள் வகை விருத்தமேயாகும்.

பதினேழாம் நூற்றாண்டில் மக்கள் பாடி வந்த சித்து, கண்ணி, கும்மி முதலியவற்றை இலக்கியங்களில் புகுத்தினர் பாரதியார்.கோணங்கிப்பாட்டின் இசையையும் பாரதிதாசன் கழைக்கூத்தாடியின் பாட்டிசையையும் தமது படைப்புகளில் தந்திருக்கின்றனர்.

இன்றும் புதிய புதிய சோதனைகள் மேற்கொண்டு புதுவடிவங்களை அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இத்தகைய மாறுதல்களை உள்வாங்கி வளர்ந்து வரும் தமிழிலக்கியத்தின் வரலாற்றைப் பின்வருமாறு பாகுபாடு செய்வதுண்டு.

தமிழ் நூல்களுள் முதன்மையானதாகக் கருதப்படுவது 'தொல்காப்பியம்' என்னும் இலக்கண நூலாகும்.

கி.மு. 600 முதல் கி.பி. 100 வரை உள்ள காலங்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்டன.

கி.பி. 200 முதல் கி.பி. 600 வரை உள்ள காலங்களில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள் தோன்றின.

பல்லவர் காலமாகிய கி.பி. 600 800இல் சைவ, வைணவ இலக்கியங்கள் தோன்றின.

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் தொடங்கி 13 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த சோழர் காலத்தில் பெருங்காப்பியங்களும் சிறுகாப்பியங்களும் புராணங்களும் இதிகாசங்களும் தோன்றின. இக்காலத்தில் உரையாசிரியர் பலரும் தோன்றித் தமிழ் உரைநடைக்கு வழிகாட்டினர்.

சோழர் வீழ்ச்சிக்குப் பிறகு நாயக்கர்கள் காலத்தில் சிற்றிலக்கியங்கள் தோன்றின. காளமேகம், குமரகுருபரர், சிவப்பிரகாசர் போன்ற புலவர்கள் தோன்றித் தமிழை வளர்த்தனர்.

கி.பி. 1800க்குப் பிறகு அதாவது ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு ஏற்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாகக் கவிதை, புதினம, சிறுகதை, நாடகம், வாழ்க்கை வரலாறு, கட்டுரை போன்ற புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன.

இத்தகைய வளர்ச்சியைக் கண்ட தமிழிலக்கிய வரலாற்றைப் பல்வேறு நூல்கள் விளக்கியுரைக்கின்றன.

சங்க இலக்கியங்களில் பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகியவற்றில் அமைந்த அடிக்குறிப்புகள் இலக்கிய வரலாற்றுச் சான்றுகளாகும். உரையாசிரியர்களின் உரைகளிலும் இலக்கிய வரலாற்றுக் கூறுகளைக் கண்டறிய முடிகிறது. 17ஆம் நூற்றாண்டுகளில் வெளிவந்த தொண்டை மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், சோழ மண்டல சதகம், ஈழ மண்டல சதகம் என்பனவற்றில் புலவர்கள், புரவலர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய புலவர் புராணமும், எழில் வெளிவந்த அட்டாவதானம் வீராசாமி எழுதிய விநோதரமஞ்சரியும் புலவர்கள் வரலாற்றை உரைக்கின்றன.

1859இல் யாழ்ப்பாணத்தில் சைமன்காசி ஆங்கிலத்தில் தமிழ்ப் புலவர்களைப் பற்றி எழுதிய 'தமிழ் புளூடார்க்', 1981இல் ஆ.சதாசிவம் எழுதிய 'பாவலர் சரித்திரத் தீபகம்', 1899இல் சபாபதி நாவலர் வெளியிட்ட 'திராவிடப் பிரகாசிகை', 1916இல் சுன்னாகம் குமாரசாமிப் புலவர் எழுதிய 'தமிழ்ப் புலவர் சரித்திரம்' என்பன இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியில் படிநிலைகளாகக் கருதப்படினும் இவை புலவர்களின் வரலாறாகவே அமைந்தன. எனினும் 1929இல் 'தமிழ் இலக்கியம்' என்ற ஆங்கில நூலை எம்.எஸ்.பூரணலிங்கனார் வெளியிட்டார். 1930இல் தமிழ் இலக்கிய வரலாற்றைக் கா.சுப்பிரமணியனார் எழுதி வெளியிட்டார். மு.அருணாசலம், தஞ்சை சீனிவாசனார், ச.சோ.சந்திரதேசிகர் ஆகியோரும் இம்முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் புலவர்கள், புரவலர்கள் வரலாறு மட்டுமின்றி நூல்களின் காலப்பகுதி, நூல்களைப் பற்றிய கருத்துரைகள், திறனாய்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கிய வரலாற்று நூல்கள் பிற்காலத்தில் எழுந்தன.

1960இல் எம்.ஆர். அடைக்கலசாமி 'தமிழ் இலக்கிய வரலாற்றை' எழுதினார். 1965இல் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் கண்ட தமிழ் இலக்கிய வரலாறும், 1969 இல் ஈழத்து அறிஞர் முனைவர் ஆ. வேலு இயற்றிய 'தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்' என்ற நூலும் 1972இல் மு.வரதராசனார் கண்ட தமிழ் இலக்கிய வரலாறும் தமிழிலக்கிய வரலாற்று நூல்களில் குறிப்பிடத்தக்கவை.

1980இல் தமிழண்ணல் (இராம. பெரிய கருப்பன்) 'புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலை வெளியிட்டார்.

1988இல் ஈழத்து அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வெளியிட்ட 'தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலை 'இலக்கிய வரலாறு எழுதியல் நூல்' என்று குறிப்பிடலாம்.

1992இல் மது.க.விமலானந்தம் எழுதிய இரு தொகுதிகளாக வெளிவந்துள்ள 'தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்' என்னும் நூல் சிறந்ததொரு நூலாகும். 1999இல் ச.வே.சுப்பிரமணியன் தமிழிலக்கிய வரலாற்றை எழுதி வெளியிட்டுள்ளார். இன்றும் பல்வேறு ஆசிரியர்களால், பல்வேறு கோணங்களில் திறனாய்வு நோக்கில் அமைந்த இலக்கிய வரலாறுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Comments

Popular Posts

தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும்

தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும் மொழி மக்களது உள்ளுணர்விலிருந்து தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு கலையாகும். போலச் செய்தல் (Imitation )ஒப்புமையாக்கம் (Anology) என்பன மொழியின் வளர்ச்சியில் சிறப்பிடத்தைப் பெறுகின்றன.  இவ்வுலகின்கண் ஆறாயிரத்தைந்நூறுக்கும் மேற்பட் மொழிகள் இருப்பதாக மொழியியலார் கருதுகின்றனர். இவற்றுள் எழுத்துக்கள் உள்ள மொழிகள் 700க்கு உட்பட்டவை. தொடர்பு, அமைப்பு, பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில்மொழிகளைப் பல மொழிக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவற்றுள் திராவிட மொழிக் குடும்பமும் ஒன்று. இந்திய நில அமைப்பில் விந்திய மலைக்குத் தெற்கே உள் பகுதிகளில் பேசப்பெற்ற மொழிகள் திராவிட மொழிகளாகும். 'தமிழ்' என்னும் சொல்லிலிருந்து தான் 'திராவிடர்' என்ற சொல் பிறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தமிழ்-> தமிழா-> தமிலா->ட்ரமிலா-> ட்ரமிடா->த்ராவிடா-> திராவிட இலக்கண, இலக்கியம் கொண்ட மொழிகளைத் திருந்தியமொழிகள் என்றும் இவை இல்லாத மொழிகளைத் திருந்தா மொழிகள்  என்றும் கால்டுவெல் பாகுபடுத்தியுள்ளார். திருந்திய மொழிகளுள் தமிழ் வளமான இலக