Skip to main content

தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும்

தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும்


மொழி மக்களது உள்ளுணர்விலிருந்து தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு கலையாகும். போலச் செய்தல் (Imitation )ஒப்புமையாக்கம் (Anology) என்பன மொழியின் வளர்ச்சியில் சிறப்பிடத்தைப் பெறுகின்றன. 

இவ்வுலகின்கண் ஆறாயிரத்தைந்நூறுக்கும் மேற்பட் மொழிகள் இருப்பதாக மொழியியலார் கருதுகின்றனர். இவற்றுள் எழுத்துக்கள் உள்ள மொழிகள் 700க்கு உட்பட்டவை. தொடர்பு, அமைப்பு, பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில்மொழிகளைப் பல மொழிக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவற்றுள் திராவிட மொழிக் குடும்பமும் ஒன்று.

இந்திய நில அமைப்பில் விந்திய மலைக்குத் தெற்கே உள் பகுதிகளில் பேசப்பெற்ற மொழிகள் திராவிட மொழிகளாகும். 'தமிழ்' என்னும் சொல்லிலிருந்து தான் 'திராவிடர்' என்ற சொல் பிறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தமிழ்-> தமிழா-> தமிலா->ட்ரமிலா-> ட்ரமிடா->த்ராவிடா-> திராவிட

இலக்கண, இலக்கியம் கொண்ட மொழிகளைத் திருந்தியமொழிகள் என்றும் இவை இல்லாத மொழிகளைத் திருந்தா மொழிகள்  என்றும் கால்டுவெல் பாகுபடுத்தியுள்ளார். திருந்திய மொழிகளுள் தமிழ் வளமான இலக்கியமும் செம்மையான இலக்கணமும் கொண்ட தொன்மையான சிறப்புமிக்க மொழியாகும்.

1922இல் சிந்து ஆற்றங்கரையில் நிகழ்த்தப்பெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் சிந்துசமவெளி நாகரிகம் கி.மு. 3500லிருந்து கி.மு. 2750 வரை நீடித்திருந்ததாக அறியமுடிகிறது. அக்காலத்தில் இந்தியா முழுமையிலும் பழந்திராவிட மொழியை மட்டுமே பேசி வந்தனர். இம்மொழியைப் பேசிய ஒரே இன மக்களாகிய திராவிடரே அங்கு வாழ்ந்து வந்தனர். பழந்திராவிட மொழியிலிருந்து தான் (Proto-Dravidian) தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலியன தோன்றின.

கி.மு.1200இல் கைபர் கணவாய் வழியாக ஆரியர் இந்தியாவுக்குள் நுழைந்தபோது ஆரிய மொழியாகிய சமஸ்கிருதமும் நுழைந்தது. இம்மொழியிலிருந்து தான் இன்று வட இந்தியாவில் பேசப்படுகிற இந்தி, பஞ்சாபி, வங்காளி, இராஜஸ்தானி, மராட்டி, குஜராத்தி, ஒரியா போன்ற பிற மொழிகள் தோன்றின. எனினும் ஆரிய மொழி வருவதற்கு முன்பே தமிழ் இங்கு அரியணையில வீற்றிருந்தது. இத்தகைய தமிழின் தொன்மையைப் பல்வேறு சான்றுகள் மெய்ப்பிக்கின்றன

நூல்கள்

தொல்காப்பியம் என்னும் பழைய தமிழ் இலக்கண நூல் மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துள் என்ப, என்மனார், புலவர், மொழிப என ஆங்காங்குக் கூறிச் செல்வதாலும் ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்' என்று தமக்குமுற்பட்ட இலக்கிய மரபைக் குறிப்பிடுவதாலும் தொல்காப்பியருக்கு முன்பே பற்பல இலக்கண நூல்கள் இருந்ததை அறியமுடிகிறது. அகத்தியம் இப்போது இல்லையெனினும் அதன் சூத்திரங்களைத் தொல்காப்பிய உரைகளில் காணமுடிகிறது.

வடமொழி இதிகாசங்களாகிய இராமாணயத்திலும் மகாபாரதத்திலும் தமிழ்நாட்டைப் பற்றியும் மதுரை என்னும் தலைநகரத்தைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அசோக மன்னரின் கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டிய நாட்டினைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

எழுத்துக்கள்

தமிழ்மொழி வட்டெழுத்து வடிவத்தைப் பெற்றுள்ளது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், இவற்றுக்குப் பிற்பட்ட இலக்கண இலக்கியங்கள் எல்லாம் வட்டெழுத்துக்களால் ஆனவை.

''பிராமி எழுத்துக்கள் தோன்றிப் பரவுவதற்கு முன்பே தமிழர் தமக்கென்று தமிழுக்கென உருவாக்கிய எழுத்துஎழுத்து முறையே வட்டெழுத்தாகும்'' என்பார் மா.இராசமாணிக்கனார்.

தமிழின் சிறப்பு

திராவிட மொழிகளுள் அதிக பரப்பளவில் பேசப்படும் மொழி தமிழ்மொழியாகும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இலங்கை பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா பிஜித் தீவு, மொரிஷியஸ் முதலிய பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பேசும் மொழியாகத் தமிழ் உள்ளது.

செந்தமிழ், கொடுந்தமிழ் என்ற ஒரு வகைப்பாகுபாடும் காணப்படுகிறது. செந்தமிழ் என்பது புலவர்களில் இலக்கியத்திற்க உரியதாகப் போற்றப்பட்ட தமிழாகும். கொடுந்தமிழ் என்பது மக்களின் பேச்சு வழக்கில் காணப்படுவதாகும்

எழுத்துக்களின் தனித்தன்மை

அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து குறில்களும் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்து நெடில்களும் ஐ, ஒள என்னும் இரண்டு சந்தியக்கரங்களும் ஆகப் பன்னிரண்டு உயிரெழுத்துகள் தமிழில் உள்ளன. கசடதபற என்னும் வல்லினமும் ஙஞணநமன என்னும் மெல்லினமும் யரல வழள என்னும் இடையினமுமாகப் பதினெட்டு மெய்யெழுத்துகள் உள்ளன. தேவநாகரியில் இல்லாத எ ,ஒ என்னும் இரு குறில்களும் தமிழுக்கும் பிற திராவிட மொழிகளுக்கும் இன்றியமையாதவை. தேவநாகரியில் உயிரெழுத்து வரிசையில் உள்ள ரு, லு தமிழில் இல்லை. குற்றியலிகரம் குற்றியலுகரம் தமிழ் ஒலிகளில் காணப்படினும் அவற்றுக்கு வடிவம் தரும் எழுத்துமுறை இப்பொழுது இல்லை.

தமிழில் ற, ன, எ, ழ, ஒ, ஆகிய ஐந்தும் சிறப்பெழுத்துக்களாகும். இவற்றுள் 'ழ'வைத் தவிரப் பிற எழுத்துக்கள் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் உள்ளன. ஆனால் 'ழ'கரம் திராவிட மொழிகளுள் தமிழிலும் மலையாளத்திலும் உலக மொழிகளில் பிரெஞ்சிலும் காணப்படுகிறது.

கசடதப என்பவை சொற்களின் முதலிலும் வல்லின மெய்யை அடுத்து வரும்போதும், இரட்டிக்கும்போதும் வல்லொலியாக (Surds) ஒலிக்கும். மற்ற இடங்களில் மொல்லொலியாக (Sonants) ஒலிக்கும் வல்லொலிக்கும் மெல்லொலிக்கும் தனி எழுத்து வடிவங்கள் இல்லை. எண்களைக் குறிக்கும் எழுத்து வடிவங்களும் பின்னங்களைக் குறிக்கும் எழுத்து வடிவங்களும் தமிழில் தனியே உள்ளன.

சொற்களின் அமைப்பு

பெயர், வினை, இடை, உரி எனச் சொற்கள் நான்குவகைப்படும். பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் காட்டும்.

பல மேனாட்டு மொழிகளில் சொல்லை அடிப்படையாக வைத்தே பால் பாகுபாடு செய்யப்படுகின்றது. ஆனால் தமிழில் ஆண், பெண் அடிப்படையில் பால் பாகுபாடு அமைந்துள்ளது.

தொழிலை உணர்த்தும் வினைச்சொற்கள் முற்று, எச்சம் என இரு வகைப்படும். இடைச்சொற்கள் தமக்கெனத் தனியே பொருள் இல்லாமல், சார்ந்த சொற்களின் பொருளை வேறுபடுத்த உதவும் சொற்களும், பொருளற்ற பிற சொற்களும் ஆகும்.

உரிச்சொற்கள் என்பவை வழக்கு இழந்தனவாய்ப் பழையசெய்யுளில் உள்ள அடிச்சொற்களாகும்.

தமிழ்மொழியின் சொற்கள் அடிச்சொற்களோடு மற்ற உறுப்புகள் சேர்ந்து ஒட்டி அமையும் சொற்களாகும். ஆகவே சொற்களின் அமைப்பு தெளிவாகத் தோன்றுகிறது.

வாக்கிய அமைப்பும் பண்டைக்காலம் முதல் இன்று வரைஏறக்குறைய ஒரே தன்மையாக இருந்து வருகிறது.

"தமிழ்மொழியில் வரும் சுட்டு, வினாப்பெயர்களின் அழகான தத்துவார்த்தமான ஒழுங்குமுறை உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை. இவ்வொழுங்குமுறை செம்மையாக அமையப் பெற்ற மொழி தமிழ்மொழி ஒன்றே" என்று கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

பிற சிறப்புகள்

தமிழ்மொழியில் குறிப்பாக, சங்க இலக்கியங்களில் அமைந்த அகத்துறைப் பாக்கள் உலகப் பேரிலக்கியங்களோடு ஒப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவையாகும்.

"தமிழில் வழங்கும் அறத்துறை இலக்கியங்கள் போன்று உலகில் வேறு எங்கணும் இல்லை" என்று ஜி.யு.போப் பாராட்டியுள்ளார்.
 
எண்ணற்ற பக்தி இலக்கியங்களைப் படைத்த தமிழ்மொழியைப் 'பக்தியின் மொாழி' என்று பறைசாற்றுகிறார் தனிநாயகம் அடிகள்.

Comments

Popular Posts

தமிழ் இலக்கிய வரலாற்றின் தோற்றமும் வளர்ச்சியும்

  தமிழ் இலக்கிய வரலாற்றின் தோற்றமும் வளர்ச்சியும் உள்ளத்தில் உதிக்கின்ற எண்ணங்கள், நினைவு அலைகள், சிந்தனைகள், கருத்துகள் ஆகியவற்றைப் பிறருக்கு எடுத்துரைக்கப் பயன்படும் கருவியே மொழியாகும். அம்மொழி பேசும் மக்களின் முடிந்த கொள்கைகளையும் முதிர்ந்த குறிக்கோள்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்வது இலக்கியமாகும். "அறிவே இலக்கியத்தின் அடிப்படை; கற்பனையே அதன் துணை; உண்மையே உள்ளீடு; இன்பமே அதன் விளைவு" என்கிறார் அறிஞர் ஜான்சன். இத்தகைய இயல்புகளை உடையதாகவே தமிழ் இலக்கியங்கள் திகழ்கின்றன. தமிழ்நாட்டில் பண்டைக்காலத்தில் பிறமொழியாரின் தாக்குறவும் பிறமொழி இலக்கியத்தின் தாக்குறவும் குறைவாக இருந்ததால் அங்கங்கே வழங்கி வந்த நாட்டுப் பாடல்களிலிருந்தே புலவர்களின் பாடல்கள் அமைக்கப்பட்டுத் தோன்றின. தமிழிலக்கியம் தொடங்கிய காலத்தில் அகவல், கலிப்பா, பரிபாடல் போன்ற செய்யுள் வகைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. பல்லவர் ஆட்சிக்காலத்தில் தமிழ், வடமொழி ஆகிய மொழிகளுக்கும் அவற்றைச் சார்ந்த கலைகளுக்கும் ஆதரவு கிடைத்து வந்தது. வடமொழிப் புராணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்நிலையில் தமிழ், வடமொழிச் சொற்கள் கலந்த